தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி கிராமத்தைச்சேர்ந்தவர்கள்தான் சென்னையில் பட்டாணித்தொழில் செய்யும் பிரபலமானவர்கள். மா.ஏழுமலைத்தேவர் என்பவர் வடசேரி கிராமத்தைச்சேர்ந்தவர். இவருடைய பேட்டி தினமணியில் வெளியானது. அதன் சாராம்சம்.
திருவொற்றியூர், அம்பத்தூர், மாதவரம், தாம்பரம், பொன்னேரி, மீஞ்ஞூர், கும்மிடிப்பூண்டி முதல் நெல்லூர் வரை பட்டாணிக்கடைகளை நடத்திவருகிறவர்கள் பெரும்பாலும் வடசேரி கிராமத்தைச்சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
மார்க்கெட் இருக்கும் இடத்தில் இவர்களின் கடை இருக்கும். ஒருவர் கடை வைத்திருக்கும் மார்க்கெட்டில் இன்னொருவர் கடை வைக்கமாட்டார்களாம். மூதாதையர் காலத்தில் இருந்து கடைபிடித்துவரும் வியாபார ஒழுக்கம் இது.
1857ல் தான் சென்னை மெமோரியல் தெருவில் கனகசபைத்தேவர் என்பவர் முதன்முதலாக பட்டாணிக்கடையைத்தொடங்கினார். காவிரியில் கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகு அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தைச்சேர்ந்த மன்னார்குடி பகுதி 10 ஆண்டுகள் தொடர் பஞ்சத்தில் சிக்கியதாம். அப்போது பிழைப்புத்தேடி வெளியேறியவர்கள் இன்று பட்டாணிக்கடை வியாபாரத்தில் காலூன்றி நிற்கிறார்கள்.
வறுத்த பட்டாணி, உப்புக்கடலை, உடைத்த கடலை, பொரிகடலை இவற்றின் சுவை, பக்குவம் இவற்றிற்கெல்லாம் முதற்படி அடுப்புதான். இளஞ்சூடாகவும் வெப்பம் அதிகரிக்காமலும் இருக்க பல நுணுக்கங்களை இவர்கள் கையாளுகிறார்கள். வறுக்கப்பயன்படும் மணலும் முக்கியமானது. ஆறுகளில் இருந்தும், கடற்கரையில் இருந்து எடுக்கப்பட்ட மணலை சலித்து குறுமணலாக்கி பட்டாணியை வறுக்க பயன்படுத்துகிறார்கள். மணல் பெரிதாக இருந்தால் வெப்பத்தில் வெடிக்குமாம்.
முதலில் பட்டாணியை சூடுபடுத்துவார்கள். அதனை முறத்தில்போட்டு மஞ்சள், உப்புக்கரைசலை தெளிப்பார்கள். அடுப்பில் உள்ள மணலில் போட்டு இளஞ்ஞூட்டில் பக்குவமாக வறுத்தெடுத்தால் மஞ்சள் நிற பட்டாணி தயார்.
உடனுக்குடன் தயாரித்து விற்கும் இந்த வியாபாரம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, மழைக்காலம் ஆகிய நாட்களில் சூடு பிடிக்கிறது.
பல நவீன இயந்திரங்கள் வந்துவிட்டாலும் கைப்பக்குவத்தை நம்பித்தொழில் செய்யும் வடசேரிக்காரர்கள் அசகாய சூரர்கள்தான்.